அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

சட்டத்தின்படி நுகர்வோர் என்பவர் யார்?

பணம் செலுத்தியோ, செலுத்துவதாக உறுதியளித்தோ, ஒரு பகுதி பணம் செலுத்தி மீதியை செலுத்துவதாக உறுதியளித்தோ அல்லது தவணை முறையின் கீழ் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும் எந்த நபரும் நுகர்வோர் ஆவார்.

குறிப்பு:

மறுவிற்பனை செய்வதற்காகவோ அல்லது வணிக நோக்கத்திற்காகவோ பொருட்களை வாங்குபவர் நுகர்வோராகக் கருதப்படமாட்டார். இருப்பினும், தமது சுயதொழிலின் மூலம் வாழ்வாதாரம் ஈட்டும் நோக்கத்திற்காக மட்டுமே பொருட்களை வாங்கியிருந்தால், அத்தகைய நபர் நுகர்வோராகக் கருதப்படுவார்.


நுகர்வோர் கல்வி தொடர்பாக தமிழ்நாடு அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?

  • மாநில அளவிலான நுகர்வோர் உதவி மையம் (Consumer Helpline) செயல்படுத்தப்படுகிறது.
  • வானொலி, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக நுகர்வோர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
  • கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் மன்றங்கள் (Consumer Clubs) அமைத்து அவற்றை ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க முக்கியமான விவகாரங்களில் சட்டரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • நியாயமற்ற வணிக நடைமுறைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
  • பொதுமக்கள் அனைத்துத் தரப்பினரிடமும் நிலைத்த நுகர்வு (Sustainable Consumption) குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

பள்ளிகள் / கல்லூரிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் (Consumer Clubs) பணிகள் யாவை?

நுகர்வோர் மன்றங்கள் திட்டமிட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். சிறப்பாக செயல்படும் நுகர்வோர் மன்றங்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நடவடிக்கைகளுக்கு மேலாக புதுமையான செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். பின்வரும் செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

  • ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழக்கிழமை, பள்ளி அல்லது கல்லூரி நேரம் முடிந்த பின் ஒரு மணி நேரம் மாதாந்திரக் கூட்டம் மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் முன்கூட்டியே ஒரு தலைப்பு அல்லது செயல்பாடு திட்டமிடப்படலாம்.
  • நுகர்வோருடன் தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச முக்கிய தினங்கள் பள்ளி அல்லது கல்லூரிகளில் கொண்டாடப்பட வேண்டும். நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சுவரொட்டி, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் போன்றவை பள்ளி / கல்லூரி அளவில் நடத்தப்படலாம்.
  • ஆண்டிற்கு குறைந்தது நான்கு நாட்கள், உள்ளூர் சந்தைகள், நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் ஆகியவற்றிற்கு களப்பயணங்கள் மேற்கொள்ளப்படலாம். மேலும், உள்ளூர் மக்களிடையே வீடு தோறும் சென்று நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தலாம். தேவையான முன் ஏற்பாடுகளுடன் சனிக்கிழமைகளில் இந்நிகழ்வுகளை நடத்தலாம்.
  • ஒவ்வொரு செயல்பாட்டின் விவரங்களும் மாணவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் இணைந்து பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • பள்ளி அல்லது கல்லூரியில் நுகர்வோர் மன்ற அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டு, நுகர்வோர் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

யார் நுகர்வோர் சார்ந்த புகார் அளிக்கலாம்?

பின்வரும் நபர்கள் அல்லது அமைப்புகள் நுகர்வோர் சார்ந்த புகார் அளிக்கலாம்:

  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட நுகர்வோர்.
  • பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் சங்கம்.
  • மத்திய அரசு.
  • மாநில அரசு / ஒன்றியப் பிரதேச நிர்வாகம்.
  • ஒரே நலன் கொண்ட பல நுகர்வோரின் சார்பில், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர்.

எந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் புகார் அளிக்கலாம்?

பின்வரும் சூழ்நிலைகளில் எழுத்துப்பூர்வமாக நுகர்வோர் புகார் அளிக்கலாம்:

  • வணிகரின் நியாயமற்ற வணிக நடைமுறைகளால் நுகர்வோருக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டிருந்தால்.
  • நுகர்வோர் வாங்கிய பொருள் குறைபாடுடையதாக இருந்தால்.
  • நுகர்வோர் பெற்ற சேவையில் குறைபாடு (Deficiency in Service) இருந்தால்.
  • பொருளின் மீது குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாகவோ அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகவோ தொகை வசூலிக்கப்பட்டிருந்தால்.
  • மனித உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தான பொருட்கள், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளை மீறி பொதுமக்களுக்கு விற்பனைக்கு வழங்கப்பட்டால்.

 

நுகர்வோர் புகாரை எங்கு பதிவு செய்யலாம்?

பொருள் அல்லது சேவையில் குறைபாடு இருப்பதை நுகர்வோர் கண்டறிந்தவுடன், முதலில் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் அல்லது அரசு அமைப்பை அணுகி, பொருளை மாற்றித் தருதல், குறைபாட்டை நீக்குதல் அல்லது செலுத்திய தொகையைத் திருப்பி வழங்குதல் போன்ற உரிய நிவாரணத்தை எழுத்துப்பூர்வமாக (பெறுதல் ஒப்புகையுடன்) கோர வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நுகர்வோர் பின்வரும் வழிகளில் புகார் அளிக்கலாம்:

1. 'நுகர்வோர்' (Nugarvor) என்ற பிரத்யேக நுகர்வோர் குறைதீர் இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு (Google Play Store) மற்றும் ஐஓஎஸ் (Apple App Store) செயலிகள் மூலம் இணையவழியில் புகார் பதிவு செய்யலாம்.

2. தேவையான ரசீதுகள், பில்கள் மற்றும் பிற இணைப்புகளுடன் (கட்டாயம்) எழுத்துப்பூர்வமான புகாரை, சென்னை மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்திற்கு, துணை ஆணையர் (நகரம்), வடக்கு / தெற்கு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, எழிலகம் இணைப்புக் கட்டிடம், சேப்பாக்கம், சென்னை – 600 005 அவர்களிடம் புகார் அளிக்கலாம்.

3. தேவையான ஆவணங்களுடன் (கட்டாயம்) எழுத்துப்பூர்வமான புகாரை,

இயக்குநர்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
எழிலகம் (4-ஆம் தளம்),
சேப்பாக்கம், சென்னை – 600 005.

என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

4. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் உரிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சட்டப்பூர்வ மனுவையும் தாக்கல் செய்யலாம்.


நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் பணவரம்பு (Jurisdiction)

நுகர்வோர் குறைதீர் ஆணையம்

வழக்கின் மதிப்பு

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது)

₹50 இலட்சத்திற்குக் குறைவானது

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

₹50 இலட்சம் முதல் ₹2 கோடி வரை

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

₹2 கோடிக்கு மேற்பட்டது



புகாருடன் இணைத்து வழங்க வேண்டிய விவரங்கள் யாவை?

நுகர்வோர் புகார் மனுவில் பின்வரும் விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்:

·       புகார்தாரரின் முழுப்பெயர் மற்றும் முழுமையான முகவரி.

·       எதிர்மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர்களின் முழுப்பெயர் மற்றும் முழுமையான முகவரி.

·       பொருள் வாங்கிய தேதி அல்லது சேவையைப் பெற்ற தேதி.

·       பொருள் அல்லது சேவைக்காக செலுத்தப்பட்ட தொகை.

·       வாங்கிய பொருட்களின் விவரங்கள், எண்ணிக்கை அல்லது பெற்ற சேவையின் முழு விவரங்கள்.

·       புகார் எதற்காக அளிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக:

o            நியாயமற்ற வணிக நடைமுறை,

o            குறைபாடுடைய பொருள் வழங்குதல்,

o            சேவையில் குறைபாடு,

o            அதிக விலை வசூலித்தல்.

·       வாங்கிய பொருளுக்கான ரசீது, பில் மற்றும் தொடர்புடைய கடிதப் பரிமாற்றங்களின் நகல்கள் ஆகியவை புகாருடன் இணைக்கப்பட வேண்டும்.

 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்கள் யாவை?

மாவட்ட, மாநில மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள், வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பின்வரும் நிவாரணங்களை வழங்க அதிகாரம் பெற்றுள்ளன:

  • குறைபாடுடைய பொருளில் உள்ள குறைபாடுகளை நீக்க உத்தரவிடுதல்.
  • குறைபாடுடைய பொருளுக்கு மாற்றாக புதிய பொருளை வழங்க உத்தரவிடுதல்.
  • பொருளுக்காக செலுத்தப்பட்ட விலையை புகார்தாரருக்கு திருப்பி வழங்க உத்தரவிடுதல்.
  • நுகர்வோர் அடைந்த இழப்பு அல்லது பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடுதல்.
  • வழங்கப்பட்ட சேவையில் உள்ள குறைபாடுகளை நீக்க உத்தரவிடுதல்.
  • நியாயமற்ற வணிக நடைமுறையை நிறுத்தவும், எதிர்காலத்தில் அதனை மீண்டும் மேற்கொள்ளாமல் இருக்கவும் உத்தரவிடுதல்.
  • மனித உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தான பொருட்களை விற்பனையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிடுதல்.
  • புகார்தாரர் மேற்கொண்ட வழக்குச் செலவினங்களை வழங்க உத்தரவிடுதல்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை

பதிவாளர்,
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
டி.என்.பி.எஸ்.சி. சாலை,
வி.ஓ.சி. நகர், பார்க் டவுன்,
சென்னை – 600 003.

தொலைபேசி : 044-25340050

789
Visitor Count
Last Updated: 20 Nov 2026